குவைத்தில் விசா மோசடியில் ஈடுபட்ட மூன்று இந்தியர்கள் கைது..!!

Three indians arrested for involving in visa fraud. (image credit :ktp fbpage )

குவைத்தில் இந்தியர்களிடம் விசா மோசடியில் ஈடுபட்டதாக 3 இந்தியர்களை குவைத் பாதுகாப்பு துறையின் ரகசிய பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதில் 2 பேர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு நபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 ற்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

மூன்று பேர் கொண்ட கும்பலின் தலைவன் என்று கூறப்படும் பரிந்தகுமார் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. குவைத் மற்றும் இந்தியா உள்ளிட்ட இடங்களில் இருந்து 50 ற்கும் மேற்பட்ட நபர்கள் இவரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிற முனையத்தில் 12,000 நபர்களுக்கு வேலைக்காக ஒப்பந்தம் தனக்கு கிடைத்துள்ளது என்றும் உயர்ந்த பதவிகளில் நல்ல சம்பளத்துடன் வேலை என்று கூறியுள்ளார். மேலும், ஓட்டுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட வேலைக்கு நல்ல சம்பளத்துடன் வேலை என்றும் கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இவ்வாறு ஏமாந்த நபர்களுக்கு போலியான விசா மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் போலியான ஒப்பந்தம் கடிதம் ஆகியவை வழங்கி ஏமாற்றியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு நபரிடமும் முன்பணமாக 1 லட்சம் வீதம் தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தவும் கூறியுள்ளார். ஒரிஜினல் விசா மற்றும் ஒப்பந்தக்கடிதம் குவைத்திற்கு வேலைக்காக கிளம்பும்போது கையில் வழங்குவதாக கூறியுள்ளார்.

இவரை நம்பி பணம் கொடுத்த நபர்கள் பல மாதங்கள் கடந்தும் தொடர் நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால் சந்தேகம் அடைந்து அவரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்றனர். இதையடுத்து குவைத்தில் இவரிடம் ஏமாந்த நபர்கள் ஒன்று சேர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தது உண்மை என்று தெரியவந்த நிலையில் இதில் தொடர்புடைய 3 நபர்களையும் ரகசிய பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Source :ktp fbpage