கொரோனா வைரஸ் எதிரொலி; பயணிகள் குறைவால் குவைத் விமானம் ரத்து..!

Kuwait flight canceled
Kuwait flight canceled

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

இதனால் சீனா, ஹாங்காங், தென்கொரியா உள்பட சில நாடுகளுக்கான சுற்றுலா விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியதில் இருந்தே சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

ஹாங்காங்கிற்கு தினமும் 427 பயணிகளுடன் செல்லக்கூடிய அந்த விமானம், கொரோனா பாதிப்புக்கு பின்னர் வெறும் 14 பேர் மட்டும் பயணம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால் கடந்த 15 தினங்களுக்கு முன்பே சென்னை-ஹாங்காங் விமான சேவை நிறுத்தப்பட்டது.

அதேபோல் சவுதி அரேபியா அரசு கொரோனா பாதிப்பு காரணமாக புனித உம்ரா பயணத்துக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்திவிட்டது. இதனால் சென்னையில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சவுதி அரேபியா செல்வதற்கு தடை ஏற்பட்டது.

குவைத், பக்ரைன், ஓமன், துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டன. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தவர்களும் கொரோனா வைரஸ் பீதியால் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு நேற்று அதிகாலை வரவேண்டிய குவைத் விமானம், பயணிகள் குறைவால் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் கடுமையான சோதனை செய்த பின்னரே அனுப்புகின்றனர்.

பன்னாட்டு முனையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், மத்திய தொழிற்படையினர், ஊழியர்கள் என அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முககவசத்துடன் பணியாற்றுகின்றனர்.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகளும் முககவசம் அணிந்தபடியே வந்து செல்கின்றனர்.