திருச்சி வந்த விமான பயணிக்கு கோரோனா தொற்று சந்தேகம்; மருத்துவமனையில் அனுமதி..!

Coronavirus Suspected case
Coronavirus Suspected case

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கோரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இண்டிகோ விமானம் வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சிறப்பு மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். அச்சமயம், சிங்கப்பூரில் வேலைசெய்துவரும் தொழிலாளி ராஜ்குமாா் (42) என்பவருக்கு தீவிரக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கோரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வாா்டில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை திருச்சி அரசு மருத்துவமனையில் கோரோனா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சோதனைக்குப் பின்னா் வீடு திரும்பி விட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளி ராஜ்குமாா் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கூவத்தூா் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.